Saturday, January 15, 2011

தைப்பொங்கலுக்கும் தமிழ்ப்புத்தாண்டிற்கும் வாழ்த்து தெரிவித்த கனடிய அரசும் ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள்

கனடிய அரசு சார்பாகவும் பிரதமர் சார்பாகவும் கனடிய குடிவரவு குடியகல்வு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜெசக் கெனி அவர்களும் ஆளும் கட்சியின் ஒன்றாரியோ கட்சித் தலைவர் ரிம் குடாக் அவர்களும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு தமது மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்து செய்திக்குறிப்புளை வெளியிட்டுள்ளார்கள்.
தைப்பொங்கல் விழாவை அனைத்துத் தமிழ்க் குடும்பங்களும், தொண்டர்களும், சமூகப்பெரியார்களும் ஒன்றுகூடிக் கொண்டாடுவதை தாம் மனமார வாழ்த்துவதில் மகிழ்வடைவதாகவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், கனடாவின் பல்கலாச்சாரத்திற்கு தமிழ் மக்களின் பங்கழிப்பையும் கனடாவிலுள்ள ஏனைய சமூகத்தினரும் அறிந்துகொள்வதற்கு இப்பொங்கல்விழாவானது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய பல்கலாச்சார தன்மையின் வெற்றியில் பங்கெடுக்கும் தமிழர்களுக்கு தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் தைப்பொங்கலின் நோக்கமும் அதில் தமிழர்களின் பங்களிப்பு பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சிங்கள அரசால் தொடர் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டுவரும் தமிழினம் சர்வதேச ரீதியாக பயங்கரவாதக் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டுவரும் துர்ப்பாக்கிய நிலையில் தமிழர்கள் நன்றிக்கடன் செலுத்தும் நற்பண்பு உடையவர்கள் என்றும் அவர்கள் தமக்கென தனியான கலை பண்பாட்டு பாரம்பரிய அம்சங்களைக் கொண்டுள்ளவர்கள் என்பதையும் ஒவ்வொரு நாடுகளும் அதன் அதிகார மையங்களும் ஏற்றுக்கொள்வதும் வாழ்த்திக்கொள்வதும் தமிழரின் விடுதலைப் பயணத்தில் முக்கியமான அம்சமாக விளங்கும் என்பதை கருத்தில் கொண்டு ஏனைய நாட்டில் வாழும் புலம்பெயர்தமிழர்களும் தங்கள் தங்கள் அரசுகளையும் அமைச்சர்களையும் தமிழர் திருநாளுக்காண வாழ்த்துச் செய்தியை பெற்று ஆவணப்படுத்திக்கொள்வதும் ஊடகங்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதும் நன்மை பயக்கும்.